திங்கள், 26 மே, 2014

My reply to Mr.Theni Kannan.

மதிப்புக்குறிய பத்திரிகையாளர் திரு. தேனி கண்ணன், என் பெயரை குறிப்பிட்டு இங்கு பதிவிட்டதால் நான் அவருக்கு பதில் தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.
//
அதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு இல்லையென்றால் இளையராஜா என்ற வார்த்தையே உங்கள் வாய் உச்சரிக்க முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்படும், அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கையும் வரும் //
 
இப்படி ஒரு வார்த்தையை தான் சொல்லவே இல்லை என்று தன் மனதில் அவர் கை வைத்து சொல்லட்டும், இதற்கு பெயர் மிரட்டல் அல்லாமல் வேறென்ன?

தவிற அகிலன் என்ற நபர் எனக்கு உறவினரோ, உடன்படித்தவரோ, உடன் வேலைபார்ப்பவரோ, நெருங்கிய நண்பரோ இல்லை. இசைஞானி மூலமாகவே, அதாவது அவரின் இசை உரிமை பெற்றவர் என்ற அடிப்படையில், பத்திரிக்கைகள் மூலம் இசைஞானியால் அறிமுகப்படுத்தப்பட்டே அவரை எனக்குத் தெரியும். அவருக்கு நான் என்னவோ வக்காலத்து வாங்குகிறேன் என்கிறார்கள். நான் எங்கு அவரை நியாயப்படுத்தி வக்காலத்து வாங்கியுள்ளேன் என்று எனக்கு யாராவது சுட்டிக்காட்டினால் ஆறுதலாவது அடைவேன்.
இங்கு இளையராஜாவின் பெயரைச் சொல்லி ஒரு பெருங்கூட்டம் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தது என்று கூறுகிறார். அதில் ஒரு 5 பேரையாவது முடிந்தால் குறிப்பிடுங்களேன், நானும் தெரிந்து கொள்கிறேன்.

திருவண்ணாமலை மீட்டிங் நடப்பதற்கு முன்பு டாக்டர்.விஜயிடம் தொடர்பு கொண்டு பேசியதைக் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த மீட்டிங் நடைபெறுவதை IFCG  நண்பர்கள் விரும்பவில்லை என்று இங்கு குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் டாக்டர். விஜயிடம் நீங்கள் இவ்வாறா கூறினீர்கள்? இந்த மீட்டிங் நடைபெறுவதை இசைஞானி விரும்பவில்லை என்று தானே குறிப்பிட்டீர்கள். அவ்வாறு நிகழ வாய்ப்பே இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். உங்கள் மனதில் உண்மை இருந்தால் இந்த இரட்டை வேடம் எதற்கு?

விஜயபாஸ்கரன் சார் விளக்கியதைப் போல 15 வருடத்தில் 30 மீட்டிங், யாரிடமும் எந்த பணமும் பெற்றுக்கொள்ளாமல் [உறுப்பினர் கட்டணம் கூட கிடையாது] நடத்தியுள்ளோம். முழுக்க இசைஞானியின் இசை குறித்து எங்களுக்குள் தெரிந்ததை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டோமே தவிற சிலர் குறிப்பிடுவதைப் போல் அவர் இசை குறித்து ஆராய்ச்சி நடத்துவமளவுக்கு எங்களுக்கு ஞானம் இல்லை என்பதை நாங்கள் அனைவரும் உணர்ந்தே இருந்தோம். இன்னும் சொல்லப் போனால் அந்த தகுதி இங்கு எவருக்குமே இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. ஆடியோ பைரஸியை ஒரு நாளும் நாங்கள் அனுமதித்தது கிடையாது. சேலத்தில் திருவாசகம் ஆடியோ கேஸட் பைரேட்டடாக விற்ற ஒரு கடைக்காரனிடம் சண்டை போட்டு அவர்களிடம் அடி கூட வாங்கியிருக்கிறேன். அப்போது நான் சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவனாக பணிபுரிந்து கொண்டிருந்தேன். “ராக்கம்மா கையத்தட்டு” பாடல், பிபிஸி நிறுவனத்தால் சென்ற நூற்றாண்டின் சிறந்த பாடலாக தேர்ந்தெடுக்கப்பட்டது உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்த பாடலை குறிப்பாக தேர்ந்தெடுத்தது முதல் அதற்காக இரவு பகலாக ஓட்டளித்து வெற்றி பெறச் செய்தது அருமை நண்பர் திரு. தேனி கண்ணனுக்கோ மற்ற நிர்வாகிகளுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் இன்றைக்கு இந்த அமைப்பின் மூத்த உறுப்பினர்களான திரு.காமேஷுக்கும், திருமிகு.முருகானந்தத்துக்கும் தெரிந்திருக்கும், அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். திருவாசகம் வெளியீட்டின் போது அந்த பொக்கிஷம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்று அதற்காக உழைத்தவர்கள் யாரென்று அதன்  தயாரிப்பாளரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அந்த நிகழ்வுக்காக நாங்கள் எங்களுக்குள் வசூலித்து ஒரு பெருந்தொகையை தலைவரிடமே நேரில் சென்று அளித்தோம். மேலும் அந்த ஒலித்தகட்டுக்கு ப்ரீ ஆர்டர்களாக அதை விட ஒரு பெருந்தொகையை வசூலித்து அளித்தோம். இது போன்ற விஷயங்களை பட்டியலிட்டுக் கொண்டிருந்தால் அது எங்கள் ட்ரம்பட்டை நாங்களே ஊதுவது போல் இருக்கும். இப்படிப்பட்ட பாரம்பரியம் கொண்ட அமைப்பின் 30 ஆவது கூட்டத்தை திருவண்ணாமலையில் நாங்கள் நடத்தவிருந்ததைத் தான் சிலர் விரும்பவில்லை என்று நண்பர் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் எங்கள் தலைவரால் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட அமைப்பு என்பதற்காக அந்த மீட்டிங்கில் கலந்து கொண்டு பெரும்பான்மையானோரும் [நானும் விஜயும் உட்பட] உறுப்பினர் கட்டணம் செலுத்தி அதில் பதிவு செய்து கொண்டோம்.

இப்படிப்பட்ட எங்களைத் தான் பணம் பெற்றுக்கொண்டு துரோகம் செய்கின்றோம் என்று எங்களைப் பற்றி ஒன்றும் தெரியாத திரு. தேனி கண்ணன் சொல்கிறார் என்ற அதிர்ச்சியை விட, எங்களை நன்கு அறிந்த இந்த அமைப்பின் மூத்த உறுப்பினர்கள், இதைக் கண்டிக்கவோ மறுக்கவோ செய்யாமல் லைக் போடுவதும் ஷேர் செய்வதுமாக செயல்படுகிறார்கள் என்பதை பார்க்கும் போது தான் இதயத்தில் ஈட்டி பாய்ச்சுவதைப் போல் உணர்கிறேன். திரு. தேனி கண்ணன் கவனத்துக்கு,  பணத்துக்காக நாங்கள் எங்கள் தந்தைக்கு நிகராய் கருதும் இசைஞானியை அடகு வைக்குமளவுக்கு மனதளவிலோ பொருளாதாரத்திலோ நாங்கள் தாழ்ந்தவர்கள் அல்ல.  நீங்கள்  “ஆசாமி”களாகக் குறிப்பிடும் நாங்கள் இருவரும் இந்த சமூகத்தில் பொருப்புள்ள மருத்துவர்கள். எங்களுக்கிருக்கும் சமூக பொருப்புக்களுக்கிடையே கிடைக்கும் சொற்ப நேரத்தில் தான் இவற்றையெல்லாம் செயல்படுத்தி வருகிறோம். இனிமேலும் யோசிக்காமல் இவ்வாறு மற்றவர்களை புண்படுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள். நாளை உங்களை நோக்கி யாராவது ஒருவர் இப்படிப்பட்ட குற்றச்சாட்டு வைக்க நேரிடலாம். அப்போது தான் அதன் வலி உங்களுக்குப் புரியும்.

அடுத்து என் மீதான பெருங்குற்றச்சாட்டு ரசிகர்கள் மரம் நடும் நிகழ்வை நான் பெரிதாக கேலி செய்துள்ளேன் என்பது. நான் எழுதிய வாசகங்கள் இவை தான்.

//
ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிராமல், ஏதோ மரம் நடப் போகிறார்களாம். அதை ஒழுங்காக செய்யச் சொல்லுங்கள். இளையராஜாவின் பெயரால் உலகம் பசுமை பெறுமாயின் நானும் மிகவும் மகிழ்வேன்.//


இதில் முதல் வரியையும் கடைசி வரியையும் சாமர்த்தியமாக தவிற்துவிட்டு நடுவில் அவ்ர்களுக்கு தேவையான ஒரு வார்த்தையை மட்டும் பற்றிக் கொண்டார்கள். நீங்களே IFCG முகநூல் தளத்தில் சென்று பாருங்கள். இந்த பிரச்சனை தொடங்கிய நாள் முதல் மரம் நடுதல் தொடர்பாக ஒரு பதிவு கூட இல்லை. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுதல் போன்ற பதிவுகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. 71,001 மரக்கன்றுகள் நடுவது என்பது சாதாரண வேலையே கிடையாது. அதற்காக பெரிதும் உழைக்க வேண்டும். ஊர்கூடி தான் தேரிழுக்க வேண்டும். 71,001 மரக்கன்றுகளை எங்கே வாங்குவது, அதை எங்கே நடுவது, அதை நடுவதற்கு எத்தனை ஆட்கள் தேவைப்படுவார்கள் என்றெல்லாம் ஆலோசிப்பதற்கே தனிக்கூட்டம் நடத்த வேண்டும். இது சம்பந்தமாக உதவும்படி  IFCG யின் மாவட்ட பொருப்பாளர் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட ஒரு பெண்மணி என்னை என் மருத்துவமனையில் வந்து சந்தித்தார். அவருக்கு இந்த மரக்கன்றுகளை எங்கே பெருவது, எங்கே நடுவது என்ற எந்த ஐடியாவும் இல்லை. நான் நண்பர் திரு. முருகானந்தத்துக்கு போன் செய்து அவரின் திட்டம் குறித்து கேட்டேன். ஏற்கனவே அவரிடம் இது குறித்து சிலமுறை பேசியுள்ளேன். IFCG மூலம் என்னவெல்லாம் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்யலாம் என்றெல்லாம் கூட விவாதித்துள்ளேன். அவர் மரக்கன்றுகளை வாங்கி அதை ஒரு பள்ளியில் வைத்து உள்ளூர் பிரமுகர் ஒருவர் தலைமையில் மாணவர்களுக்கு வழங்கி அவர்களை அவர்கள் வீட்டில் வளர்த்து பராமறிக்கச் செய்வது. அடுத்த வருடம் அவர்களை சந்தித்து அவர்கள் வளர்த்த மரத்துக்கு பரிசளிப்பது என்ற திட்டத்தினை சொன்னார். எத்தனை ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு அவ்வாறு கொடுக்க முடியும்? உண்மையில் நான் முன்பே இது குறித்து எங்கள் ஊரிலிருக்கும் ஒரு வெளிநாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலரிடம் பேசியிருந்தேன். திருவண்ணாமலையில் சமீபத்தில் மலையில் மின்னல் தாக்கி பல மரங்கள் எரிந்து சாம்பலானது. அதனால் திருவண்ணாமலையை சுற்றியுள்ள காடுகளில் மரக்கன்றுகளை நட இசைஞானி ரசிகர்கள் நாங்கள் ஆர்வமாக உள்ளோம் என்றும் அதற்கு ஆகும் செலவு குறித்து விசாரித்து வைத்துள்ளேன். அவர் பெயர் திரு. கோவிந்தா, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிக்கு எதிரே அருணகிரி பூங்கா என்ற பூங்காவை மிகவும் அருமையாக நிர்வகித்து வருகிறார். அவரிடம் நான் இது குறித்து பேசியுள்ளேனா என்று யார் வேண்டுமானாலும் சென்று கேட்டு தெரிந்து கொள்ளலாம். அல்லது இது குறித்து நான் பேசியுள்ளேனா என்று நண்பர் திரு.முருகானந்தத்துக்கு மனமிருப்பின் வெளிப்படுத்தலாம். நேற்றைக்கு என்னால் IFCG முகநூல் பக்கத்துக்குள் நுழையவோ, பதிவிடவோ முடியாமல் இருந்தது.[இன்றைக்கு திறந்து விட்டிருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்] எனவே அந்த பக்கத்திலிருந்து என்னை நீக்கி விட்டதாக கருதி, இப்படி ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்காமல் மரம் நடுகிறார்களாம் அந்த வேலையை, நான் உங்கள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் நீங்களாவது செய்யுங்கள். அவ்வாறு இசைஞானியின் பெயரால் இந்த பூமி பசுமை அடையுமாயின் நானும் மிகவும் மகிழ்வேன் என்ற தொனியில் தான் அதைக் குறிப்பிட்டிருந்தேனே தவிற நீங்கள் குறிப்பிடும் எள்ளல் புத்தி எனக்கு ஒருபோதும் வந்ததில்லை.


//
நல்ல ரசிகர்னா என்ன செய்ய வேண்டும் ராஜா சாருக்கு எதிரா நடக்கும் அந்த நபர்களின் தொடர்பை அடியோடு துண்டித்துக் கொல்ள வேண்டாமா// அப்படி யாராவது ஒருவரின் தொடர்பை துண்டித்துக்கொள்ள சொல்லி என் தலைவர் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் அதை சிரமேற்கொண்டு செயல்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம். அவர் தவிற்து வேறு யார் பேச்சையும் கேட்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை.

எங்களை போலி ரசிகர்களாக இனம் காணுங்கள் என்று மற்ற ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். நாங்கள் தான் சிறந்த இசைஞானி ரசிகர்கள் என்று யாருக்கும் நிரூபித்துக் கொண்டிருப்பது எங்கள் வேலை அல்ல. அப்படி எங்களை எல்லோரும் நினைக்க வேண்டும் என்ற எண்ணம் கூட எங்களுக்கு இல்லை. “மனமுள்ளோர் என்னைப் பார்ப்பார் மனதினால் அவரைப் பார்ப்பேன்” என்ற பாடல் வரிகளை எங்கள் தலைவரின் வார்த்தைகளாகவே எண்ணி வாழ்கிறோம். எங்களை அவர் புரிந்து கொள்வார் எனபதை மட்டும் திடமாக நம்புகிறோம்.

//எல்லாத்தையும்
பண்ணிட்டு நாங்கலாம் ராஜா ரசிகர்னு சொல்றாங்களே , நான் நினைக்கிறேன் இவிங்க ஒரு புது இளையராஜாவை கண்டுபிடித்து எங்கோ ஒளிச்சு வைச்சிருபாய்ங்களோ. //

 இசைஞானியின் இசையை ஆராதிப்பதை ஒரு குறிப்பிட்ட அமைப்பின் மூலமாக மட்டுமாகவே நிகழ்த்த வேண்டியது என்று ஒன்றும் கிடையாது.  நாங்கள் புது இளையராஜாவைக் கண்டுபிடிக்கவில்லை. இறைவனைப் போன்றே இசைஞானியும் ஒருவர் தான் எனபதை நாங்கள் நம்புகிறோம். உலகில் எல்லோரும் பல மார்க்கங்களின் வழியாக இறைவனைத் தேடுகிறார்கள். நாங்கள் எங்கள் மார்க்கத்தில் இசைஞானியைப் போற்றுகிறோம். உங்கள் மார்க்கத்தையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனல் அதற்காக எங்கள் மார்க்கத்தை குறை சொல்ல  யாருக்கும் உரிமை இல்லை.