திங்கள், 29 ஜூலை, 2013

வானவன் மாதேவி என்னும் வாமன அவதாரம்.

அனேகமாக என் மழலைப் பிராயத்துக்குப் பிறகு நேற்று தான் மதிய உணவை நான் அழுதுகொண்டே சாப்பிட்டேன்! உணர்ச்சிப் பெருக்கில் ஏற்ப்பட்ட ஆனந்தக் கண்ணீர் அது. இரண்டு மிகப்பெரிய ஆளுமைகளை நேற்று சேலத்தில் சந்தித்தேன். அவர்கள் இருவரும் பேரெழில் கொண்ட யுவதிகள். அந்த அபூர்வ சகோதரிகள் பெயர் வானவன் மாதேவி மற்றும் இயல்இசை வல்லபி ஆகும். தசைச்சிதைவு நோய்க்கு ஆளான இந்த சகோதரிகள் தங்களைப் போல் பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கினைத்து அவர்களுக்கான மருத்துவ உதவிகள், உபகரணங்கள், சக்கர நாற்காலிகள், திறன்களை ஊக்குவித்தல் மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக கணிவான, அரவனைப்பையும் நம்பிக்கையும் அளித்து வருகிறார்கள். அதற்காக இவர்கள் “ஆதவ் டிரஸ்ட்” என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் நிறுவி வெற்றிகரமாக நான்கு ஆண்டுகள் கடந்து நேற்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளனர். சக்கர நாற்காலி துணையுடன் மட்டும் இவர்களால் வலம் வர முடியும். வலுவான பொருட்களை கையால் தூக்கக் கூட முடியாத நிலை, ஆனால் மனதளவில் அவர்கள் வலிமையை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

நேற்று ஆதவ் டிரஸ்டின் ஐந்தாம் ஆண்டு விழாவில் நானும் கலந்து கொண்டேன். பல மருத்துவர்கள் கலந்து கொண்டு அவர்களைப் பாராட்டி, ஆலோசனைகளையும் வழங்கிக் கொண்டிருந்தனர். எழுத்தாளர் பாமரன் ஆச்சரியமூட்டும் வகையில் யாரையும் திட்டாமல் நேர்மறையான சிந்தனையில் பேசிக்கொண்டிருந்தார். இயலிசை வல்லபி நன்றியுரையில் எனக்காகவே நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோது தோற்றுக்கொண்டிருந்தேன், பிறருக்காக சிந்திக்கத் தொடங்கியபோது ஜெயித்து விட்டேன் என்றார்.

நிகழ்ச்சிக்கு பல்வேறு ஊர்களில் இருந்து தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வந்திருந்தனர். அவர்களெல்லாம் ஆர்வமாக அருகிலிருந்தவர்களுடன் பேசிக்கொண்டிருந்ததை அமைதியாக கண்டு கேட்டவாரிருந்தேன். அந்த பெற்றோர்களையெல்லாம் தெய்வத்துக்கு சமமாக கருதுகிறேன். 30 கிலோ எடைகொண்ட சிறுவனை ஒரு தாய் அள்ளித் தூக்கிக்கொண்டு வந்தார். 25 வயது மதிக்கத்தக்க ஒரு சக்கர நாற்காலி இளைஞன் என்னுடன் மிகுந்த வாஞ்சையுடன் பேசிக்கொண்டிருந்தான், மெல்லிய புன்னகையுடன் அவன் தந்தை ‘வீட்டில் அவனுக்குப் பேச துணை யாரும் இல்லை, தம்பி’ என்றார். என் கண்கள் கலங்கிவிட்டது. ஒரு சிறுவனின் பெயர் கேட்டேன், வளர் நிலவன் என்றான். நிச்சயம் அந்த பிறை நிலவு ஒருநாள் வளர்ந்து முழு நிலவாய் பிரகாசிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

மேடையில் இருந்த அந்த சகோதரிகளிடம் சென்றேன். எனக்கு முன்பு ஒரு நடுத்தர வயது முரட்டுத் தோற்றம் கொண்ட மனிதர் ஒருவர் தன் மனைவியுடன் மாதேவியிடம் சென்று பேசிக்கொண்டிருந்தார், தன் குழந்தைக்கு இந்த நோய் உள்ளதை சொல்லி ஒரு குழந்தையைப் போல் அழுதுகொண்டிருந்தார். அவர்களுக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆறுதல் கூறிக்கொண்டிருந்தனர் அந்த பெண்கள். தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டால் சரியாகிவிடும், ஏன் நாங்கள் இல்லை? நாங்கள் 10 வருடத்துக்கு முன்பே செத்துப் போயிருக்க வேண்டியவர்கள் என்று மிக இயல்பாக சிரித்தபடி மாதேவி சொல்லிய போது எனக்கு மனம் என்னவோ செய்தது. அவர்களைப் போலவே பலர் இவர்களை நோக்கி வந்து ஏதோ ஒரு ஆன்மீக குருவிடம் ஆசி பெற்றுச் செல்லும் பக்தர்கள் போல் பவ்யமாக நின்று பேசிச்சென்றனர். என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். ஏ, இவர் பல் டாக்டர், நம்ம தண்டபாணி சார் நண்பர் என்றார் மாதேவி, தண்டபாணி சாரின் நண்பர்களும் உருவத்தில் அவரைப் போலத் தான் இருப்பார்கள் போல என்று வல்லபி சிரித்தார். இவர்களின் இலக்கிய ஆர்வம் வியப்புக்குறியது. எழுத்தாளர் ஜெயமோகனின் தீவிர வாசகிகளான இவர்களைத் தேடி ஜெயமோகன், பவா செல்லதுரை, நாஞ்சில் நாடன், எஸ்.ராமக்கிருஷ்ணன் போன்ற ஆளுமைகள் வந்து சென்றுள்ளனர்.

நான் எடுத்து சென்ற ”நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை” மற்றும் ”எல்லா நாளும் கார்த்திகை” என்ற எழுத்தாளர் பவா செல்லதுரையின் இரு நூல்களை கொடுத்தேன். மேலும் அவர்கள் டிரஸ்டுக்கு என்னால் இயன்ற பண உதவியும் செய்தேன். மகிழ்ச்சியாக என்னுடன் பேசிக்கொண்டிருந்தனர். மாதேவியின் குரல் மிகவும் நன்றாக உள்ளது, அவர் பாடினால் நன்றாக இருக்கும் என்றேன். அடடா, ஒரு இளையராஜா பக்தரிடமிருந்தே எனக்கு பாரட்டு கிடைத்து விட்டதே என்று கூறி வெகுளியாய் அவர் சிரித்த சிரிப்பு அவர் குரலை விட இனிமையாக இருந்தது!
.
பிறகு கீழிறங்கி வந்து மற்றவர்கள் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வானவன் மாதேவியின் அத்தை அருள்மொழி அவர்கள் ஒரு அற்புதமான பெண்மணி. அவரும் அதே நோயினால் பாதிக்கப்பட்டவர். அவர் தான் இவர்களுக்கு பெயர்கள் சூட்டியுள்ளார். தன்னம்பிக்கையின் மொத்த உருவமாக அவரைச் சொல்லலாம்! அமர் சேவா சங்கத்தின் உறுப்பினரான அவர் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டியவை. ஆயிரம் கோயிலுக்கு செல்வதும் அமர் சேவா சங்கத்துக்கு செல்வதும் ஒன்று தான் என்று அவர் சொல்லியதும், அதன் நிறுவனர்கள் திரு.ராமக்கிருஷ்ணன் [இவருக்கு கழுத்துக்கு கீழே எந்த உறுப்பும் செயல்படாது]  மற்றும் சங்கரராமன் ஆகியோர் பற்றி அவர் சொல்லியதைக் கேட்ட போது இப்போதே அங்கு செல்ல வேண்டும் என்ற ஆவல் தோன்றியது.  அந்த 25 வய்து இளைஞனுக்கு மிகுந்த நம்பிக்கையை ஊட்டிக் கொண்டிருந்தார்.  நம்பிக்கை தருவது மட்டுமின்றி பல நன்றாக படிக்கும் அடித்தட்டு மாணவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து கல்வித்தொகை பெற்றுத் தந்து அவர்கள் வாழ்வில் விளக்கேற்றியுள்ளார்!

எல்லாவற்றுக்கும் மேலாக என்னை நெகிழ்த்தியவர்கள் அங்கு களப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர்கள் தான். அவர்களில் பலர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள். அவர்கள் இல்லையென்றால் அங்கு அணுவும் அசைந்திருக்காது. சிரித்த முகத்துடனேயே அந்த தளம் முழுவதும் ஓடியாடி வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்த பின்பு சொல்கிறேன், இனியும் எவராவது, “இன்றைய இளைஞர்கள் பொருப்பற்றவர்கள்” என்று சொன்னால், நான் வன்முறையாளனாக மாறக்கூடும்! அவர்கள் ஆதவ் டிரஸ்ட் மட்டுமில்லாமல் வேற்கள் போன்று பல்வேறு அமைப்பில் இருப்பதாகச் சொன்னார்கள். ப்ரீத்தி என்ற தன்னம்பிக்கை சொற்பொழிவு நடத்தும் மாற்றுத்திறனாளி ஒருவர் உங்கள் ஊர்க்காரர் தானே, அவரை உங்களுக்கு தெரியுமா? என்று கேட்கின்றனர். என் அறியாமையையும் கட்டுப்பெட்டித்தனத்தையும் எண்ணி என் மீதே எனக்கு வெறுப்பு வந்தது. “எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா, இருட்டில் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா?” என்று என்னை நோக்கி அவர்கள் பாடுவது போல் உணர்ந்தேன்.

நான் அழுது கொண்டே சாப்பிட்ட கதையை சொல்ல மறந்து விட்டேனே! உணவு இடைவேளையின் போது அந்த 25 வயது இளைஞனுக்கு அவன் தந்தை சோறு ஊட்ட அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தபோதே என் தொண்டை கமறத் தொடங்கிவிட்டது, சுற்றிப் பார்த்த போது எங்கும் அதே நிகழ்வுகள் தான், ஆனால் நான் உடைந்து போனது ஒரு காட்சியைக் கண்டு தான். இவர்களெல்லாம் தன் ரத்த சொந்தத்துக்காக பரிவு காட்டுகிறார்கள், அதை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் எந்த வித ரத்த சம்பந்தமும் இல்லாத ஒரு 20 வயது இளைஞன் வல்லபிக்கு ஒவ்வொரு விள்ளலாக தன் கையில் எடுத்து வல்லபிக்கு, மிகப்பொருமையாக ஒரு தாய்மையின் கணிவுடன் வாயில் ஊட்டிக் கொண்டிருந்தான். 30 நிமிடங்களுக்கு மேலாக எந்த வித சலிப்புமில்லாமல் அதே மாறாப் புன்னகையுடன் அவன் ஊட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்த போது தான் நான் உடைந்து அழத் தொடங்கிவிட்டேன். அழுது கொண்டே சாப்பிட்டேன். என்னைப் பார்த்தும் ஏதும் கேட்காமல் மற்றவர்கள் சென்றது மிகவும் ஆறுதலாக இருந்தது. அந்த இளைஞனின் பெயர் பிரசாத், அவனை தனிமையில் பார்த்திருந்தால் அவன் காலில் விழுந்து கும்பிட்டிருப்பேன். 
பெருமையாக சொல்லிக் கொள்வேன், அந்த ஆணின் தாய்மைப் பண்பு என் நாட்டுக்கே அதுவும் என் தமிழினத்துக்கே உறிய அறிய பண்பு! அவனைப் போலவே அங்கு பலர் சுப்பு, பிஜூ, மற்றும் பல பெண் பிள்ளைகள் என பலர் நல்லவேளையாக அவர்கள் நிற்க நேரமின்றி ஓடிக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை அவர்கள் ஒவ்வொருவருடனும் பேசியிருந்தால் நான் அழுது ஆற்பாட்டம் செய்து விட்டிருக்கக்கூடும். 

வானவன் மாதேவியும் வல்லபியும் வாமன அவதாரமாக உயர்ந்து உலகளந்து கொண்டிருக்கிறார்கள். சேலம் வரும் போது நீங்களும் வந்து அவர்களைப் பாருங்களேன்.

சனி, 8 ஜூன், 2013

பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்

சமீபத்தில் என் வீட்டில் ஒரு புத்தகத்தைத் தேடிக்கொண்டிருந்தபோது சில தாள்கள் என் கைக்குக் கிட்டியது. சுமார் 8 வருடங்களுக்கு முன்பு சேலம் அரசு மருத்துவமனையில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த சமயம்,ஒரு புத்தகக் கடையில் ‘தீம் தரிகிட’ என்ற சிறுபத்திரிக்கை என் கவனத்தை ஈர்த்தது. “திருவாசக மோசடி” என்று தலைப்பிட்டு இசைஞானியின் படத்தை முகப்பில் போட்டிருந்தார்கள்.  வாங்கி சென்று ஒரே மூச்சில் படித்து முடித்து கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளானேன். கட்டுரை என்ற பெயரில் முழுக்க முழுக்க தனிமனித தாக்குதல் நடத்தியிருந்தார் ஞாநி[!!??] சங்கரன்!இரவு சாப்பிடக் கூட போகவில்லை. அதுவரை ஒரு விடுப்புக் கடிதம் கூட எழுதியிறாத எனக்கு இதற்கு மறுப்புக் கடிதம் எழுத வேண்டும் என்று தோன்றியது! இரவு 8:15 மணிக்குத் தொடங்கி சரியாக நள்ளிரவி1:30 மணிக்கு எழுதி முடித்தேன். ஒரு வகையில் என்னை முதன்முதலில் எழுதத் தூண்டியது அந்த கட்டுரை தான். அந்த கடித பிரதி தான் இப்போது கிடைத்தது. இதை ஒரே மூச்சில் எழுதியிருந்தாலும் தற்போதைய வேலைபளு காரணமாய் இதை தரவேற்ற எனக்கு 5 நாள் ஆனது.

இந்த மறுப்புக் கடிதம் படிக்கும் முன் தீம்தரிகிட புத்தகத்தில் வெளியான கட்டுரையை இங்கு தருகிறேன். அதைப் படித்த பின் என் மறுப்பு கடிததையும் படிக்கவும்!
http://www.keetru.com/literature/essays/jnani.php

இதோ என் கடிதம்:

அன்புள்ள என்று எழுதவோ “ஞானி” என்று உங்களை விளிக்கவோ மனம் ஒப்பவில்லை. திரு.N.V.சங்கரன் அவர்களுக்கு, தங்களின் ‘தீம்தரிகிட’ ஜூலை16-30, 2005 இதழ் படிக்கும் சாபம் எனக்குக் கிடைத்தது. அதில் “திருவாசக மோசடி” என்ற தலைப்பில் தங்களின் கிருக்கல்களைப் படித்து மிகவும் வேதனையுற்றேன். தமிழ் நண்டு கதை தான் நினைவுக்கு வந்தது. ஒரு ஒப்பற்ற கலைஞன் தமிழனாய் இருக்கும் ஒரே காரணத்தால் தமிழனாலேயே புறக்கணிக்கப்படும் அவலம் தமிழகத்தைத் தவிற உலகின் எந்த மூலையிலும் நிகழாது. இது தமிழ்நாட்டின் சாபக்கேடு. கட்டுறைகளை விமர்சிக்கும் அளவுக்கு நான் பெரியவனல்ல, இருப்பினும் தங்களின் கட்டுக்கதைகளை விமர்சிக்க நான் போதும்.

திருவாசக மோசடி
இவ்வாறு தங்கள் கட்டுறைக்கு தலைப்பிட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். திருவாகத்தின் மூலம் இளையராஜா என்ன மோசடி செய்தார்? எவ்வளவு மோசடி செய்தார்? என்பதை கடைசிவரை நீங்கள் கூறவேயில்லை.

மெட்டுக்குப் பாட்டா?
இளையராஜா ஏற்கனவே போட்டு வைத்திருந்த சில மெட்டுக்களுக்கு தகுந்த சில பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொண்டார் என்ற உங்களின் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். அதற்கு தாங்கள் அளிக்கும் சிறுபிள்ளைத்தனமான விளக்கத்தைப் படிக்கையில் சிரிப்புத் தான் மேலோங்குகிறது. விட்டால் இளையராஜா அமைத்த மெட்டுக்கு மாணிக்கவாசகரே வந்து எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார் என்று கூறினாலும் கூறுவீர்கள் போலும்.
“புற்றில் வாழ் அறவும்” பாடல் அமைக்கப் பட்டுள்ள தொணி, உலகின் ஒரு பிரம்மாண்ட இசைக்குழுவை, ஒரு சாதாரண பண்ணைப்புரத்துப் பாமரன் பார்த்து வியப்படைகிறான். மேலும் அவன் அந்த மேலைநாட்டு இசையைத் தனக்குத் தெரிந்த நாட்டுப்புற சந்தத்தோடு, தன்னாட்டுக் கவிஞனின் பாட்டையும் பொருத்திப் பாட முயல்கிறான், என்ற ’தீம்’ வைத்து பாட்டிசைக்கிறார் இசைஞானி.
”முத்திநெறி அறியாத” பாடலுக்கு இதைவிடச் சிறப்பாக தனியாக மெட்டமைக்கும் திறன் இசைஞானிக்கு உண்டு என்பது உலகிற்கே, ஏன் உங்களுக்கே தெரிந்த ஒன்று. ஆனால் தங்களின் கீழ்த்தரமான புத்தி அதை ஏற்க மறுக்கிறது. திருவாசக வெளியீட்டு விழாவிலே, திரு.வைகோ அவர்கள் ஒரு திருவெம்பாவைப் பாடலை எடுத்துக் கூற, மேடையிலே எந்த முன்னேற்பாடுமின்றி உடனேயே அந்தப் பாடலை மெட்டுடன் பாடினார் இளையராஜா. ஒலிநாடாவில் பேசுவதும், மெட்டுக்கேற்ப வேறு பாடல் போடுவது போல் செய்வதும் ராஜாவுக்குப் புதிதன்று. சமீபத்திய ‘ஒரு நாள் ஒரு கனவு’ ஒலிநாடாவில் ‘காற்றில் வரும் கீதமே’ பாடலுக்கு முதலில் ‘ஸ்ரீமுகுந்தா கேசவா’ என்று எழுதுவது போலவும் பின்பு மாற்றுவதும் “குணா” திரைப்பட ஒலிநாடாவில் ‘கண்மணி அன்போடு’ பாடலுக்கு முதலில் ‘அன்பே அன்பே’ என்று பாடலைப் போட்டு பிறகு மீண்டும் பாடலை மாற்றுவது போல் அமைத்திருப்பதும் ஒரு சுவைக்காகத் தான் என்பதை அறிவிலிகளும் புரிந்து கொள்வர், உங்கள் ஈகோ காரணமாக புரிந்து கொள்ள உங்களுக்கு மனமில்லை.


MARKETING SLOGAN
இளையராஜா இருபத்தொன்றாம் நூற்றாண்டில் திருவாசகத்துக்கு இசையமைக்கப் போகிறார் என்பதை உணர்ந்து எட்டாம் நூற்றாண்டிலேயே இதற்கு “திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்று marketing slogan வழங்கப்பட்டதா!? அப்படியென்றால் குறள் பற்றிய சான்றோர்களின் கருத்துக்கள் எல்லாம் திருக்குறளான marketing slogan என்கிறீர்களா? பாரதியின் முகத்தை உங்கள் பத்திரிகைக்கு marketing emblem ஆக பயன்படுத்துகிறீர்கள் என்று நான் சொன்னால் ஏற்ப்பீர்களா?

ORATORIO
Oratorio என்றால் என்ன என்று define செய்த சுஜாதாவின் ஒற்றை வரியை மட்டும் எடுத்துக் கொண்டு நீங்கள் உளரிக்கொட்டியிருப்பது உங்கள் பகுத்தறிவு மண்டையைக் காட்டவில்லை, தங்களின் மூளையில்லா வெற்று மண்டையைக் காட்டுகிறது. Oratorio என்றால் என்ன என்ற அடிப்படை ஞானம் பெற இந்த வார Frontline ஆங்கிலப் பத்திரிக்கையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்ளவும்.
திருவாசகத்தின் Classical Cross over பற்றி நான் உங்களுக்கு விவரிப்பதை விட தாங்கள் குறிப்பிட்டுள்ள திரு.எம்.பி.சீனிவாசன் மற்றும் வி.எஸ்.நரசிம்மன் ஆகியோரையே கேட்டுத் தெளியுங்கள். அவர்கள் நன்றாய் விவரிப்பார்கள்.

ஆல்பம் குறித்த தங்களின் மேம்போக்கான விமர்சனம்
திருவாசகம்-இளையராஜா ஒலித்தட்டில் இரண்டு பாடல்கள் மட்டுமே கேட்கும்படி உள்ளது. அவை ‘புற்றில் வாழ் அறவும்’ மற்றும் ’முத்து நற்றாழம்பூ’ ஆகியவை. ‘பூவார் சென்னி’ பாடலுக்கு மூன்றாம் இடம் கொடுத்துள்ளீர்கள். மீதி மூன்றும் சரியில்லை, இரைச்சலாய் உள்ளது என்று நீங்கள் கூறியிருப்பதைப் போல் ஒரு இசையறிவே இல்லாத மூடன் கூட கூறமாட்டான். ‘பொல்லா வினையேன்’ பாடலைப் பற்றி கட்டுறை நெடுகிலும் ஒரு எழுத்தைக் கூட குறிப்பிடாதது வியப்பளிக்கவில்லை. உங்கள் மனமே குருகுருத்து இருக்கும்.ஹங்கேரி நாட்டில் பிறந்து, பல Grammy awards பெற்ற திரு.Stephen Schwartzh அவர்கள் குறிப்பிடுகிறார், “நான் இதுவரையில் இப்படி ஒரு இசையைக் கேட்டதே இல்லை, இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றியதை பெருமையாகக் கருதுகிறேன்”. ஒரு அன்னிய நாட்டுக் கலைஞன், ஒரு பண்ணைபுரத்தின் சாதாரன, பாமர தமிழனுக்கும் தமிழச்சிக்கும் பிறந்த ஒரு மனிதனை பாராட்டுவது என்பது இளையராஜாவுக்கு மட்டுமா பெருமை!? இதை 110 கோடி இந்தியர்களும் கொண்டாட வேண்டாமா? வேண்டாம்! நீங்கள் அத்தமிழனைக் கொண்டாட வேண்டாம்! தயவு செய்து அவனை காலில் போட்டு மிதிக்காதீர்கள்.


திருவாசகம் வெளியீட்டு விழாவிலே, அரங்கத்தின் இண்டு இடுக்குகளும், மேலும் ஒரு கடுகுக்குக் கூட இடமில்லாமல் நிறைந்திருக்க, வெளியே அதைப் போன்று இருமடங்கு மக்கள் குழுமியிருக்க, “பொல்லா வினையேன் நின் பெரும்சீர் புகழுமாறு ஒன்றறியேன்” என்ற அந்த 20 நிமிட இசைவிருந்தை வழங்குகையில், எள் விழுந்தாலும் எல்லோருக்கும் கேட்கும் அமைதியோடும், கண்களை முட்டி வரும் கண்ணீரோடும், கேட்டு முடித்ததும், இவ்வமிர்தம் படைத்த கலைஞனுக்கு “standing ovation” என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்களே, அதைப் போல் எழுந்து நின்று, விண்ணிலிருக்கும் மாணிக்கவாகனுக்கும் கேட்கும் வண்ணம் கரவொலி எழுப்பினார்களே, அந்த பாடலை பற்றிய உங்களின் ஒற்றை வரி விமர்சனம் “நன்றாக இல்லை”![மேலும் இதைவிட ஓதுவார்கள் சம்பிரதாயத்துக்கு ஒப்புவிக்கும் திருவாசகமே மேல் என்றெல்லாம் உளரியுள்ளீர்கள்]. இவ்வாறு இசைஞானம் துளியுமில்லாத நீங்கள் உங்கள் பத்திரிகைக்கு “தீம்தரிகிட” என்று ஒரு சந்தத்தின் பெயரை வைத்திருப்பது வியப்பளிக்கிறது!

திருவாசக ஒலித்தட்டை காசு கொடுத்து வாங்கினேன் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதற்கு மிக்க நன்றி!. சிறப்பான சிஸ்டம் மூலம் கேட்டும் எனக்குப் பிடிக்கவில்லை என்று கூறியுள்ளீர்கள். தவறு இசையில் அல்ல! இசையைக் கேட்கும் உங்கள் மனதில் தான் உள்ளது. ஒரு நல்ல மனநல மருத்துவரை விரைவில் அனுகுவது நல்லது.

V.S.நரசிம்மனின் இசையை சிலாகித்துள்ளீர்கள். அவரும் மிகச் சிறந்த கலைஞன் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. ஆனால் அவர் ராஜாவின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர் என்பதை அவரே மறுக்க மாட்டார். அது அவரின் ‘அச்சமில்லை அச்சமில்லை’ படப்பாடல்களின் மூலம் நமக்கேத் தெரிய வரும்.


ஹங்கேரியில் இசைக்கக் காரணம்
இந்த மாபெரும் இசை விருந்தை தருவதற்கு, உலகின் ஒரு மிகப் பழமையான, மிகச் சிறந்த இசைக்குழுவை அவர் தேர்ந்தெடுத்ததில் என்ன தவறு இருக்கிறது? மேலும் அவர் ஹங்கேரியில் மட்டும் இசைப்பதிவு செய்யவில்லை. சென்னையிலும் மூன்று நாட்கள் ஒலிப்பதிவு செய்துள்ளார். மேலும் ’புடாபெஸ்ட்’ அருகில் 200 கிமீ தொலைவில் தான் ’வியன்னா’ உள்ளது. வியன்னா நகரம் உலகின் மிகப்பெரிய இசை ஜாம்பவான்கள் ஆகிய “மொஸார்ட், பாக், பீத்தோவன்” போன்ற கலைஞர்கள் இசைக்கோலோச்சிய இடம். அவ்விடத்தில் ஒரு தமிழனும் இசையமைத்து உள்ளான் என்பது நாம் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம் அல்லவா!? அதை விடுத்து இவ்வாறு இகழ்தல் நியாயமா சங்கரன் சார்!?


இளையராஜாவுக்கு திரையிசையில் FORM போய்விட்டது என்று ஒரு அபாண்ட குற்றச்சாட்டு வைத்துள்ளீர்கள். சென்ற ஆண்டில் இசைஞானி இசையமைத்த பாடல்களும் படங்களும் மாபெரும் வெற்றி பெற்றவை. அவரின் இசையார்வம் இந்த தலைமுறையினர் என்ன, இதற்கு அடுத்த தலைமுறையினராலும் போற்றப்படுகிறது. அவரின் பாடல்கள் கோடானுகோடி மக்களின் மனதில் என்றும் நிறைந்திருக்கும். அதனால் அவர்
      ”நேற்று இல்லை நாளை இல்லை
       எப்பவுமே ராஜா தான்”
ஒருவரின் திறமையை இன்னொருவரால் cross over செய்ய முடியாது. மெல்லிசை மாமன்னரை விஞ்ச இசைஞானியால் முடியாது, இசைஞானியை விஞ்ச இசைப்புயலால் முடியாது. அவரவருக்கான பாணியை மக்கள் ரசிக்கத் தான் செய்கிறார்கள். இசைஞானியை விஞ்சிவிட்டதாக நீங்கள் கூறும் இசைப்புயலே சமீபத்தில் “இளையராஜா நம் நாட்டின் பொக்கிஷம்” என்று வாயாறப் புகழ்ந்துள்ளார்.

திருவாசகத்தின் நோக்கம் என்ன?
நீங்கள் கேட்ட இந்த கேள்விக்கு இசைஞானியே மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். இன்றைக்கு நம் இளைஞர்கள் கணிணியிலேயே பெரும்பான்மையான நேரத்தைக் கழிக்கின்றார்கள். மேற்கத்திய விஷயங்களிலேயே நாட்டம் செலுத்தி வருகின்றனர். நம் நாட்டிலேயே உள்ள கணக்கில்லா பொக்கிஷங்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. அவர்களை நம் கலாச்சார பொக்கிஷங்களின்பால் திசைத் திருப்பவேண்டும் என்றும், அது தன் கடமை என்றும் குறிப்பிடுகிறார். அதில் வெற்றியும் கண்டுள்ளார். இல்லையெனில் 25 வயது நிரம்பிய நான், ஒசெட்டிய கவிஞன் “கொஸ்தா கெதகூரொவ்” கவிதைகள் படிக்கும் அதே வேளையில் இன்று மாணிக்கவாசகரையும், சேக்கிழாரையும் படிக்கிறேன்!
இவ்வாறு என் நண்பர்களிடமும் பல மாறுதல்களை என்னால் காண முடிகிறது! இது இசைஞானிக்கு மட்டுமான கடமையன்று, ஒரு பத்திரிகையாளராக அது உங்களின் கடமையும் கூட! அதைச் செய்ய என்ன முயற்சி எடுத்துள்ளீர்கள்?

ஈழத்தமிழர்கள் திருவாசகத்தை பெரிதும் வாங்குவதால் தான் வைகோ இதைப் புகழ்ந்துள்ளார் என்று கூறுவதெல்லாம் சுத்த பேத்தல்!  

கத்தோலிக்க பாதிரியார் அருள்திரு.ஜெகத் கஸ்பாரைப் பற்றியோ தமிழ் மையத்தைப் பற்றியோ விமர்சிக்க உமக்கு எந்த அறுகதையும் இல்லை என்பதை கடுமையாகவே தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் மிக உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிறார்கள். இசைஞானி இளையராஜா இந்த திட்டத்தை கையிலெடுத்தபோது பல தனவந்தர்களிடம் உதவி கேட்டார். அவர்கள் கைவிரித்தது மட்டுமின்றி அலட்சியம் செய்த போது, தமிழ்மையம் என்ற வேற்று மதத்தைச் சேர்ந்த சாதாரண அமைப்பைச் சார்ந்த அருட்தந்தை திரு. ஜெகத் அவர்கள் இத்திட்டத்தை தைரியமாக கையில் எடுத்துக் கொள்ளுங்கள்! “ “நல்ல செயலை நீ தொடங்கு நான் முடித்து வைக்கிறேன்” என்று நாங்கள் வணங்கும் இயேசு பெருமான் கூறியுள்ளார். இத்திட்டத்தை நிறைவேற்ற நான் பிச்சை எடுக்கவும் தயாராக இருக்கிறேன் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் பல இன்னல்களுக்கிடையே அரும்பாடு பட்டு இன்று இத்திட்டத்தை நிறைவேற்றியுள்ளார் என்று எண்ணும்போது, அவரை இருகரம் தூக்கி தொழத் தோன்றுகிறது.

”கற்றைவார் சடை எம் அண்ணல்” வரிகளை தேர்ந்தெடுத்ததன் மூலம் அவர்களுக்கு இசைஞானி தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஈசனுக்குள் இயேசுவைக் காணும் முதிர்சியும் தெளிவும் அவர்களுக்கு இருக்கிறது. இது உயர்ந்த பண்பு. இது தான் பகுத்தறிவு! இவர்கள் இருவருக்கிடையே மத துவேஷத்தைத் தூண்டும் எண்ணத்துடன் செயல்படும் உங்களை இனிமேலும் ‘பகுத்தறிவாளர்’  என்று கூறிக்கொள்ளாதீர்.
தேவையே இல்லாமல் நீங்கள் மதப் பிரச்சனையைக் கிளப்ப முயல்வது இது முதல் முறை அல்ல! ஏற்கனவே ஒரு தொலைக்காட்சி பேட்டியில் “பாபா” படப்பாடலில் இரு வேறு மதத்தினரை ரஜினிகாந்த் நண்பர் பகைவர் என்று பாகுபடுத்துகிறார் எண்று இல்லாததை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு நீங்கள் மதப்பிரச்சனையைத் தூண்ட முயன்றது சமுதாயத்துக்கு மிகவும் அபாயகரமானது. இது பகுத்தரிவாளன் செய்யும் செயலல்ல! நீங்கள் அரசியலில் நுழைந்தால் மிகப்பெரிய அளவில் பணம் சம்பாதிக்கலாம்.அது இந்நாட்டின் சாபக் கேடு.


காசே தான் கடவுளடா?
இசைஞானி வெறும் பணத்துக்காக மட்டுமே இந்த ஒலித்தட்டை வெளியிட்டுள்ளார் என்பது உங்கள் கண்டுபிடிப்பு! இன்று திரையுலகில் இசை என்றாலே குத்துப்பாட்டுகளும் கர்ணகொடூரமான இசை இறைச்சலும் தான் என்று ஆகிவிட்ட நிலையில், நம் இலக்கிய பொக்கிஷங்களுள் ஒன்றான திருவாசகத்தை கையிலெடுத்துக் கொண்டு, அதை இன்று மக்களிடையே உலவவிட்டிருக்கும் இசைஞானியின் நோக்கம் வெறும் பணம் தானென்று சொல்ல உமக்கு எப்படித் தான் மனம் வந்ததோ!?
      இப்பணி 75% கடன் பெற்றே நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதி 25% யார் யாரிடம் பெறப்பட்டது, எவ்வளவு பெறப்பட்டது என்பதை அறிய WWW.TIS-USA.COM என்ற இணையதளத்தைத் தொடர்பு கொள்ளவும். அப்பாவி மக்களிடம் பணம் வசூலித்து விட்டார் என்று கோபம் கொள்ளுகிறீர்கள், அந்த சிறுதொகையைப் பெற்றுக்கொண்டு அதைவிட பல மடங்கு அளப்பறிய இசைச்செல்வத்தை நமக்கு வழங்கியுள்ளார்.
இத்திருப்பணிக்கு நிதி அளித்தோரில் முக்கியமானவர் பகுத்தறிவாளர் பெரியார்தாசன் அவர்கள் என்பது உமக்குத் தெரியுமா!? மேலும் உடல் ஊனமுற்றவர்களுக்காகவும், முதியோர்களுக்காகவும், இதுவரை மேடை ஏறியிராத இசைஞானி மேடை ஏறிப் பாட உள்ளார். அது நிகழும் போது அவரை நீங்கள் பாராட்டாவிட்டாலும் தயவுசெய்து தூற்றாதீர்கள்.

அரசாங்கம் ஏன் பணம் தர வேண்டும்? என்று கேட்கிறீர்கள்.
இதைப்போன்ற திட்டத்துக்கு அரசு பணம் தர வேண்டும் என்று இசைஞானி கேட்கவில்லை! இசைஞானிக்கு யாரால் ஈகோ ஏற்ப்பட்டது என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்களோ அவர் தான் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது! இன்று “டாஸ்மாக்’ என்ற பெயரில் அரசு, சாராயம் விற்க பணம் செலவிடுகிறது! அரசு விழாக்கள் என்ற பெயரில் ஆடம்பர செலவுகள் நடைபெறுகின்றன. யானைகள் ஓய்வெடுக்கக் கூட பணம் செலவிடுகிறது. அதையெல்லாம் ஒப்புக்கொள்ளுகிறீர்கள்! தமிழ், தமிழ் என்று எவன் எவனோ வாய் கிழியப் பாடுகிறான். அப்படியிருக்க தமிழ் இலக்கியம் மேலும் வெளிவர அரசு பணம் தரக்கூடாது என்று போர்க்கொடி தூக்குகிறீர்கள்.
வேற்று மதப்பாடல்களுக்கும், பகுத்தறிவு பாடல்களுக்கும் பணம் தருவார்களா என்று கேட்கிறீர்கள். தரலாம்! தாரளமாக பண உதவியும், உறிய சான்றோர் துணையிருந்தால், தமிழ் இலக்கியத்தை உலகறியச் செய்ய ஒரு இசைஞானி அல்ல ஓராயிரம் இசைஞானிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்!


இளையராஜா நரிப்பாட்டை பரிப்பாட்டாய் காட்டியுள்ளார், காப்பாற்ற ஈசன் வரவில்லை என்கிறீர்கள். நரிப்பாட்டுக்கு மக்கள் இவ்வளவு பெரிய ஆதரவு தரமாட்டார்கள்! இன்று திருவாசகம் ஒலிப்பேழைகள் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது என்பது உலகறிந்த உண்மை.
கடைசி வரியில் “அஞ்சோம்” என்று பண்மையில் எழுதியுள்ளீர். “தனி மரம் தோப்பாகாது!” அஞ்சேன் என்று வேண்டுமானால் ஊளையிடுங்கள்! ஆனால் இசைஞானி இன்று இமையமலையாய் நிற்கிறார், அவரை நோக்கி நீங்கள் எவ்வளவு குரைத்தாலும் வீண் தான்! துன்பம் உமக்குத் தான்!

சில குறிப்புகள்
ராஜா விகடனில் விளம்பரம் தேட முயன்றுள்ளார் என்கிறீர். பத்திரிக்கை பேட்டிகளுக்கு என்றுமே ஆசைப்படுபவரில்லை எங்கள் ராஜா! அதே விகடனில் வாரந்தோரும் எழுத நீங்கள் யார் சிபாரிசைப் பெற்றீர்கள்? எவ்வளவு பணம் செலவிட்டிர்கள்?

கடவுளை மறுப்பது மட்டுமே பகுத்தறிவு என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையிலிருந்து வெளியே வாருங்கள். இந்த திருவாசகத்தை என்னுடைய எத்தனையோ நாத்திக நண்பர்கள், வேற்று மதத்தைச் சேர்ந்த நண்பர்கள் கேட்டு பாராட்டியுள்ளனர்.

ஒரு சகநாட்டுச் சேர்ந்த தகுதியுடைய கலைஞனைப் பாராட்ட மனமில்லாமல் இருக்கும் உங்களுக்குத் தானே ஈகோ தலைதூக்கி இருக்கிறது!?
“ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை” உமது ஒற்றைக் கை எம்மாத்திரம்!? சக கலைஞர்களை பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள்.

திண்ணியத்தில் நடைபெற்ற சம்பவத்துக்கு இளையராஜா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று வருந்துகிறீர்கள்! இசை தவிற அவர் வேறு விஷயங்களைப் பேசுவதில்லை என்பது ஊரறிந்த விஷயம். இதற்க்காக உண்மையில் போராட வேண்டியவர்கள் பகுத்தறிவாளர்கள், திராவிடக் கட்சித் தலைவர்களே! இன்றைய ஆளுங்கட்சியினர் மூட நம்பிக்கைகளை ஆதறிக்கிறார்கள், அரசியல் செய்கிறார்கள், அவர்களை எதிர்த்து அறிக்கை விட நீங்கள் தயாரா!?

இக்கடிதத்தை சற்று கடுமையாகவே எழுதியுள்ளேன். அதன் உள்ளார்த்தத்தைப் புறிந்துகொண்டால் போதும். மற்றவற்றை மன்னிக்கவும். இக்கடிதத்தை ஈகோ காரணமாக உங்கள் பத்திரிக்கையில் வெளியிட மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்! அவ்வாறு வெளியிட்டாலும் இனியும் உங்கள் பத்திரிக்கையை வாங்கி பணத்தை வீணடிக்க நான் தயாரில்லை! முடிந்தால் எனக்குக் கடிதம் எழுதவும்.
“புற்றில்வாழ் அரவும் அஞ்சேன்
பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்
மற்றுமோர் கலைஞன் தன்னை
முன்னேறப் பொருக்க மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால்
அம்ம! நாம் அஞ்சுமாரே”

                                          என்றும் அன்புடன்,
                                          மருத்துவர். மு.ஸ்ரீதர்.
                                          23-07-2005
                                          சேலம்.

எனது முகவரி
மரு.மு.ஸ்ரீதர்,
இலக்கம் 268,
துக்காப்பேட்டை அஞ்சல்,
செங்கம்.  606709.
திருவண்ணாமலை மாவட்டம்.
கைபேசி: 9443849088.

மின்னஞ்சல் முகவரி: incissor@yahoo.co.in.