திங்கள், 29 ஜூலை, 2013

வானவன் மாதேவி என்னும் வாமன அவதாரம்.

அனேகமாக என் மழலைப் பிராயத்துக்குப் பிறகு நேற்று தான் மதிய உணவை நான் அழுதுகொண்டே சாப்பிட்டேன்! உணர்ச்சிப் பெருக்கில் ஏற்ப்பட்ட ஆனந்தக் கண்ணீர் அது. இரண்டு மிகப்பெரிய ஆளுமைகளை நேற்று சேலத்தில் சந்தித்தேன். அவர்கள் இருவரும் பேரெழில் கொண்ட யுவதிகள். அந்த அபூர்வ சகோதரிகள் பெயர் வானவன் மாதேவி மற்றும் இயல்இசை வல்லபி ஆகும். தசைச்சிதைவு நோய்க்கு ஆளான இந்த சகோதரிகள் தங்களைப் போல் பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கினைத்து அவர்களுக்கான மருத்துவ உதவிகள், உபகரணங்கள், சக்கர நாற்காலிகள், திறன்களை ஊக்குவித்தல் மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக கணிவான, அரவனைப்பையும் நம்பிக்கையும் அளித்து வருகிறார்கள். அதற்காக இவர்கள் “ஆதவ் டிரஸ்ட்” என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் நிறுவி வெற்றிகரமாக நான்கு ஆண்டுகள் கடந்து நேற்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளனர். சக்கர நாற்காலி துணையுடன் மட்டும் இவர்களால் வலம் வர முடியும். வலுவான பொருட்களை கையால் தூக்கக் கூட முடியாத நிலை, ஆனால் மனதளவில் அவர்கள் வலிமையை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

நேற்று ஆதவ் டிரஸ்டின் ஐந்தாம் ஆண்டு விழாவில் நானும் கலந்து கொண்டேன். பல மருத்துவர்கள் கலந்து கொண்டு அவர்களைப் பாராட்டி, ஆலோசனைகளையும் வழங்கிக் கொண்டிருந்தனர். எழுத்தாளர் பாமரன் ஆச்சரியமூட்டும் வகையில் யாரையும் திட்டாமல் நேர்மறையான சிந்தனையில் பேசிக்கொண்டிருந்தார். இயலிசை வல்லபி நன்றியுரையில் எனக்காகவே நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோது தோற்றுக்கொண்டிருந்தேன், பிறருக்காக சிந்திக்கத் தொடங்கியபோது ஜெயித்து விட்டேன் என்றார்.

நிகழ்ச்சிக்கு பல்வேறு ஊர்களில் இருந்து தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வந்திருந்தனர். அவர்களெல்லாம் ஆர்வமாக அருகிலிருந்தவர்களுடன் பேசிக்கொண்டிருந்ததை அமைதியாக கண்டு கேட்டவாரிருந்தேன். அந்த பெற்றோர்களையெல்லாம் தெய்வத்துக்கு சமமாக கருதுகிறேன். 30 கிலோ எடைகொண்ட சிறுவனை ஒரு தாய் அள்ளித் தூக்கிக்கொண்டு வந்தார். 25 வயது மதிக்கத்தக்க ஒரு சக்கர நாற்காலி இளைஞன் என்னுடன் மிகுந்த வாஞ்சையுடன் பேசிக்கொண்டிருந்தான், மெல்லிய புன்னகையுடன் அவன் தந்தை ‘வீட்டில் அவனுக்குப் பேச துணை யாரும் இல்லை, தம்பி’ என்றார். என் கண்கள் கலங்கிவிட்டது. ஒரு சிறுவனின் பெயர் கேட்டேன், வளர் நிலவன் என்றான். நிச்சயம் அந்த பிறை நிலவு ஒருநாள் வளர்ந்து முழு நிலவாய் பிரகாசிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

மேடையில் இருந்த அந்த சகோதரிகளிடம் சென்றேன். எனக்கு முன்பு ஒரு நடுத்தர வயது முரட்டுத் தோற்றம் கொண்ட மனிதர் ஒருவர் தன் மனைவியுடன் மாதேவியிடம் சென்று பேசிக்கொண்டிருந்தார், தன் குழந்தைக்கு இந்த நோய் உள்ளதை சொல்லி ஒரு குழந்தையைப் போல் அழுதுகொண்டிருந்தார். அவர்களுக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆறுதல் கூறிக்கொண்டிருந்தனர் அந்த பெண்கள். தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டால் சரியாகிவிடும், ஏன் நாங்கள் இல்லை? நாங்கள் 10 வருடத்துக்கு முன்பே செத்துப் போயிருக்க வேண்டியவர்கள் என்று மிக இயல்பாக சிரித்தபடி மாதேவி சொல்லிய போது எனக்கு மனம் என்னவோ செய்தது. அவர்களைப் போலவே பலர் இவர்களை நோக்கி வந்து ஏதோ ஒரு ஆன்மீக குருவிடம் ஆசி பெற்றுச் செல்லும் பக்தர்கள் போல் பவ்யமாக நின்று பேசிச்சென்றனர். என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். ஏ, இவர் பல் டாக்டர், நம்ம தண்டபாணி சார் நண்பர் என்றார் மாதேவி, தண்டபாணி சாரின் நண்பர்களும் உருவத்தில் அவரைப் போலத் தான் இருப்பார்கள் போல என்று வல்லபி சிரித்தார். இவர்களின் இலக்கிய ஆர்வம் வியப்புக்குறியது. எழுத்தாளர் ஜெயமோகனின் தீவிர வாசகிகளான இவர்களைத் தேடி ஜெயமோகன், பவா செல்லதுரை, நாஞ்சில் நாடன், எஸ்.ராமக்கிருஷ்ணன் போன்ற ஆளுமைகள் வந்து சென்றுள்ளனர்.

நான் எடுத்து சென்ற ”நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை” மற்றும் ”எல்லா நாளும் கார்த்திகை” என்ற எழுத்தாளர் பவா செல்லதுரையின் இரு நூல்களை கொடுத்தேன். மேலும் அவர்கள் டிரஸ்டுக்கு என்னால் இயன்ற பண உதவியும் செய்தேன். மகிழ்ச்சியாக என்னுடன் பேசிக்கொண்டிருந்தனர். மாதேவியின் குரல் மிகவும் நன்றாக உள்ளது, அவர் பாடினால் நன்றாக இருக்கும் என்றேன். அடடா, ஒரு இளையராஜா பக்தரிடமிருந்தே எனக்கு பாரட்டு கிடைத்து விட்டதே என்று கூறி வெகுளியாய் அவர் சிரித்த சிரிப்பு அவர் குரலை விட இனிமையாக இருந்தது!
.
பிறகு கீழிறங்கி வந்து மற்றவர்கள் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வானவன் மாதேவியின் அத்தை அருள்மொழி அவர்கள் ஒரு அற்புதமான பெண்மணி. அவரும் அதே நோயினால் பாதிக்கப்பட்டவர். அவர் தான் இவர்களுக்கு பெயர்கள் சூட்டியுள்ளார். தன்னம்பிக்கையின் மொத்த உருவமாக அவரைச் சொல்லலாம்! அமர் சேவா சங்கத்தின் உறுப்பினரான அவர் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டியவை. ஆயிரம் கோயிலுக்கு செல்வதும் அமர் சேவா சங்கத்துக்கு செல்வதும் ஒன்று தான் என்று அவர் சொல்லியதும், அதன் நிறுவனர்கள் திரு.ராமக்கிருஷ்ணன் [இவருக்கு கழுத்துக்கு கீழே எந்த உறுப்பும் செயல்படாது]  மற்றும் சங்கரராமன் ஆகியோர் பற்றி அவர் சொல்லியதைக் கேட்ட போது இப்போதே அங்கு செல்ல வேண்டும் என்ற ஆவல் தோன்றியது.  அந்த 25 வய்து இளைஞனுக்கு மிகுந்த நம்பிக்கையை ஊட்டிக் கொண்டிருந்தார்.  நம்பிக்கை தருவது மட்டுமின்றி பல நன்றாக படிக்கும் அடித்தட்டு மாணவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து கல்வித்தொகை பெற்றுத் தந்து அவர்கள் வாழ்வில் விளக்கேற்றியுள்ளார்!

எல்லாவற்றுக்கும் மேலாக என்னை நெகிழ்த்தியவர்கள் அங்கு களப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர்கள் தான். அவர்களில் பலர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள். அவர்கள் இல்லையென்றால் அங்கு அணுவும் அசைந்திருக்காது. சிரித்த முகத்துடனேயே அந்த தளம் முழுவதும் ஓடியாடி வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்த பின்பு சொல்கிறேன், இனியும் எவராவது, “இன்றைய இளைஞர்கள் பொருப்பற்றவர்கள்” என்று சொன்னால், நான் வன்முறையாளனாக மாறக்கூடும்! அவர்கள் ஆதவ் டிரஸ்ட் மட்டுமில்லாமல் வேற்கள் போன்று பல்வேறு அமைப்பில் இருப்பதாகச் சொன்னார்கள். ப்ரீத்தி என்ற தன்னம்பிக்கை சொற்பொழிவு நடத்தும் மாற்றுத்திறனாளி ஒருவர் உங்கள் ஊர்க்காரர் தானே, அவரை உங்களுக்கு தெரியுமா? என்று கேட்கின்றனர். என் அறியாமையையும் கட்டுப்பெட்டித்தனத்தையும் எண்ணி என் மீதே எனக்கு வெறுப்பு வந்தது. “எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா, இருட்டில் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா?” என்று என்னை நோக்கி அவர்கள் பாடுவது போல் உணர்ந்தேன்.

நான் அழுது கொண்டே சாப்பிட்ட கதையை சொல்ல மறந்து விட்டேனே! உணவு இடைவேளையின் போது அந்த 25 வயது இளைஞனுக்கு அவன் தந்தை சோறு ஊட்ட அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தபோதே என் தொண்டை கமறத் தொடங்கிவிட்டது, சுற்றிப் பார்த்த போது எங்கும் அதே நிகழ்வுகள் தான், ஆனால் நான் உடைந்து போனது ஒரு காட்சியைக் கண்டு தான். இவர்களெல்லாம் தன் ரத்த சொந்தத்துக்காக பரிவு காட்டுகிறார்கள், அதை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் எந்த வித ரத்த சம்பந்தமும் இல்லாத ஒரு 20 வயது இளைஞன் வல்லபிக்கு ஒவ்வொரு விள்ளலாக தன் கையில் எடுத்து வல்லபிக்கு, மிகப்பொருமையாக ஒரு தாய்மையின் கணிவுடன் வாயில் ஊட்டிக் கொண்டிருந்தான். 30 நிமிடங்களுக்கு மேலாக எந்த வித சலிப்புமில்லாமல் அதே மாறாப் புன்னகையுடன் அவன் ஊட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்த போது தான் நான் உடைந்து அழத் தொடங்கிவிட்டேன். அழுது கொண்டே சாப்பிட்டேன். என்னைப் பார்த்தும் ஏதும் கேட்காமல் மற்றவர்கள் சென்றது மிகவும் ஆறுதலாக இருந்தது. அந்த இளைஞனின் பெயர் பிரசாத், அவனை தனிமையில் பார்த்திருந்தால் அவன் காலில் விழுந்து கும்பிட்டிருப்பேன். 
பெருமையாக சொல்லிக் கொள்வேன், அந்த ஆணின் தாய்மைப் பண்பு என் நாட்டுக்கே அதுவும் என் தமிழினத்துக்கே உறிய அறிய பண்பு! அவனைப் போலவே அங்கு பலர் சுப்பு, பிஜூ, மற்றும் பல பெண் பிள்ளைகள் என பலர் நல்லவேளையாக அவர்கள் நிற்க நேரமின்றி ஓடிக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை அவர்கள் ஒவ்வொருவருடனும் பேசியிருந்தால் நான் அழுது ஆற்பாட்டம் செய்து விட்டிருக்கக்கூடும். 

வானவன் மாதேவியும் வல்லபியும் வாமன அவதாரமாக உயர்ந்து உலகளந்து கொண்டிருக்கிறார்கள். சேலம் வரும் போது நீங்களும் வந்து அவர்களைப் பாருங்களேன்.

1 கருத்து:

  1. இலக்கியத்தினால் என்ன பயன் என்று ஒரு முறை ஜெயமோகன் இவர்கள் இருவருக்கும் அளிக்கும் நம்பிக்கையை என் எழுத்து அளித்ததால் நான் எழுத்தாளனாக உணர்ந்த இன்னொரு தருணமிது என்ற வகையில் எழுதி இருந்தார். அவர்களைப் பற்றி எழுத எனக்கு புதிதாகஎதுவும் இல்லை. இவர்கள் மூலம் மற்றவர்களின் இவர்கள் மீதான நேசத்தை நான் நெகிழ்ச்சியுடன் பார்க்கிறேன். இருவரையும் குழந்தைகளாக பார்க்கிறேன். உணர்ச்சி பூர்வமான எழுத்து நடை தம்பி! நெகிழ்ச்சி அடைதல் எல்லா இனத்துக்கும் உள்ள பண்புதான்! தமிழனதுக்கு மட்டும் என்று குறுக்க வேண்டாமே! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு